Thursday, December 22, 2011

பதேர் பாஞ்சாலி 1955


லக சினிமாவுக்கு இந்தியாவின்  பங்களிப்பு என்ன? என்ற கேள்விக்கு உடனே  எல்லோரின் நினைவுக்கும் வருவது:- அபு ட்ரைலாஜி, அபுவின் முதல் பாகம் - பதேர் பாஞ்சாலி , பதேர் என்றால் சாலை | பாஞ்சாலி என்றால் வங்காள மொழியில் நாட்டுப்புறப்பாட்டு. [சாலையில் கேட்கும் பாட்டு]

ப்படி திடீரென? சத்யஜித் ரே  ஃப்லிம் மேக்கரானார்? அதுவும் எப்படி கிடைத்தது இந்த உலகப்புகழ்?, உலகின் எல்லா தலைசிறந்த சினிமா இயக்குனரும்,கலை விற்ப்பன்னரும் இவர் படைப்புகளை தேடிப்பார்த்து வியந்து, இதன் சாயலில்லாமல் எங்களால் இனி படம் செய்யமுடியாது என சொன்ன புகழ், பிறந்த பயனை அவர் அன்றே , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டார்!!!.என்றால் மிகையல்ல.

ந்தியராகிய நமக்கு தான், ஃபாரினர் ஒரு பண்டம் உசத்தின்னு சொல்லிவிட்டால், உடனே அது உசத்தின்னு சொல்லி நாமும் கோஷம் போடுவோமில்லையா!!  எனவே நானும், சின்ன வயதில் எத்தனையோ முறை  ஞாயிறு மதியம் தேசிய ஒளிபரப்பில் போட்ட , ஆர்ட் ஃப்லிம் என சகலரும் ஒதுக்கிய இந்த படத்தை தரவிறக்கி மிகவும்  பொறுமையுடன் பார்க்க ஆரம்பித்தேன். பதேர் பாஞ்சாலி முடிந்த பின்னர் அபரஜிதோ,அது முடித்து அபுர் சன்சார் என இந்த படங்களை ஒரு பிரமிப்புடனான உந்துதலுடன் பார்க்க ஆரம்பித்தேன், ஆம்!!! சோறு தண்ணியே இல்லாமல்.
ருப்பு வெள்ளை+35 எம் எம், இதை பார்க்க  சிறிது பழக்கம் இருந்தால் போதும், வைட் ஸ்க்ரீன் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு 35 எம் எம் பிடிக்குமா? !!! இதை நிவர்த்தி செய்ய மீடியா ப்ளேயரில் வைட்ஸ்க்ரீன் ஸ்ட்ரெட்ச் செய்தேன் , அட ரம்மியம், என்ன சொல்லுவது? கலக்கல்.

ப்போது வெறும் 1.5 லட்சம் ரூபாயில் இப்படி ஓர் படைப்பா? இந்த ட்ரைலாஜிக்காக சத்யஜித் ரே அவர்கள் செலவிட்டது 1950-59 வரை ஒன்பது வருடங்கள்,வேறெந்த படங்களைப்பற்றியும் சிந்திக்காமல்  காலம் சென்ற ஓர் கல்கத்தா வாழ்ந்த ஏழை எழுத்தாளர் பிபூதிபூஷன் பண்டோபத்யாய் அவர்கள் எழுதிய பதேர் பாஞ்சாலி என்னும் சுயசரிதம் கலந்த புதினத்தை செதுக்கி படமாக்குவதிலேயே கழித்தார். இந்த படத்துக்கென அவர் ஒழுங்கான திரைக்கதை வடிவத்தை அமைத்துக்கொண்டதில்லையாம்,
வர் மனதில் தோன்றும் அந்த புதினத்தின் பாகங்களையும், அந்த புதினத்தின் பாகங்களுக்கு இவர் ஸ்டோரி போர்டு சித்திரம் போல வரைந்து வைத்ததையும் கொண்டே படப்பிடிப்பை நடத்தியுள்ளார், தொடர்ந்து படமெடுக்க முடியாத பண நெருக்கடியும் இவரை வாட்ட.கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்தார். ஐந்து வருடத்தில் முதல் படம் ஒரு வழியாக முடிந்தது.

வனிக்க வேண்டிய விடயம் ஒன்று . இவர் படத்தில் நடித்த அத்தனை பேரும் அமெச்சூர் நடிகர்களே. இவர் பதேர்பாஞ்சாலியில் உபயோகித்த உத்திகள் இன்றளவில் புகழ்பெற்ற இயக்குனர்களால் கையாளப்பட்டு வருகின்றன. அதில் பணிசெய்த கேமராமேன்  உட்பட  அனைவரும் புதுமுகங்களே! [ ஒரு சோற்றுப்பதமாக சிறுமி துர்கா பெரிய பானையிலிருந்து பூனைக்குட்டிகளை வெளியே தூக்குவாள்,அதில் பானையின் வாய் வழியே துர்காவின் முகத்தை பார்க்கலாம்,இதை தான் பின்னர் உலக சினிமா இயக்குனர்கள் இன்று வரை பின்பற்றி வார்ட்ரோபினுள் கேமிரா வைத்து அது வழியே நடிகரை பார்ப்பதுபோல் காட்சி வைக்கின்றனர்]


ந்த படம் மட்டுமல்ல!!! சத்யஜித்ரேயின் மொத்த படைப்புகளையும் மெர்ச்சண்ட் ஐவரி ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனத்தார். தேடித்தேடி ஆவண காப்பு செய்துவருகின்றனராம். அவருக்கு கிடைக்காத பெருமையே இல்லை எனலாம், இவர் வாங்காத விருது! என இருந்தால் இனி அறிமுகம் செய்தால் தான் உண்டு போலும் , நாம் ஒதுக்கி தள்ளிய இந்த படைப்பு நியூயார்க்கில்   8 மாதம் ஓடியுள்ளது. ஏன்? இப்படி ஒரு வெற்றி?, உலக சினிமாவில் ஆமை வேகம் தான் உசத்தியா?  ரே,  அப்படி என்ன அவர் சாதித்தார்?

ன்கு பாருங்கள் மக்களே!!! இந்த மனிதர் சினிமா எடுக்கவில்லை,ஒரு சாமானியனின் வாழ்க்கையை  எதோ நாம் பக்கத்து வீட்டில் குடியிருந்தபடி சிரிப்புடனும், ஆசையுடனும், கோபத்துடனும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார். படத்தில் யாரும் நடிப்பை தர தரவென பொழியவில்லை, பிழிய வில்லை, ரே அவர்களை நோக்கி இதுவாயிரு!!! என சொன்னபடி  அவர்கள் அதுவாய் மாறியுள்ளனர். இப்படித்தான்  சாத்தியமாயிற்று இந்த வெற்றி!!! ரேயை பற்றி படிக்க இணையத்தில் மிக அதிகம் உண்டு, எழுதி மாளாது, பின் வரும் பதிவில் மீதம் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.

50களில் மேடை நாடகத்தனமான அரங்கங்களமைத்து, இசையும் பாடல்களும் படத்தில் திணிக்கப்பட்டு, நடிகர்கள் வானத்தையும், சுவற்றையும் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசும் பராசக்தி போன்ற படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட காலத்தில் மேற்கே இப்படி ஒரு ரியாலிச முயற்சி,ரேவுக்கு தான் என்ன ஒரு துணிச்சல்?

படத்தின் கதை:-

1920 களின் வங்காளத்தின் குக்கிராமம், அவ்வூரில் இரண்டே பிரிவினர், 1.ஏழை , 2.பணக்காரர், மூன்று தலைமுறையாக முன்னோர் வாழ்ந்த ஓட்டு வீடு பாழடைந்திருக்க, அதை சரிசெய்யக் காசில்லாமல், எந்த வேலைக்கு போனாலும் தன் சம்பளத்தை கொடு, என கேட்க திராணியில்லாத ஏழை பிராமணன் - ஹரிஹரன். [கனு பேனர்ஜி], பூஜாரியாகவும் , பிராமணார்த்தம் சாப்பிட்டும், ஓய்வு நேரத்தில் வங்காள கவிதைகள்,கதைகள் புணைந்தும் கூட  துக்கானி லேது!!! அதிர்ஷ்டகட்டை.

வரின் மிகப்பொறுப்பான, கீழ்படிதலுள்ள அழகிய மனைவி சர்ப்பஜெயா [கருணா பேனர்ஜி] அப்படி ஒரு பதிவிரதை, கர்ப்பிணி வேறு, இவர்களின் அழகிய பெண்குழந்தை துர்கா [உமா தாஸ்குப்தா] பெற்றொருக்கு பயந்தவள், இருந்தும் சிறு வயதினுக்கே உரிய மிகுந்த சேட்டைகளுண்டு,

சுட்டிப்பெண் துர்காவுக்கு கொள்ளை பிரியம் யார் தெரியுமா? இவளின் விதவை அத்தைப்பாட்டி-இந்திர்[சுனிபலா தேவி ] தன் கூன்போட்ட முதுகோடே தன் வேலைகளை தானே செய்துகொள்ளும் ஒரு 80 வயது ஜென்மம். பாட்டி தனியே தன் எதிர் குடிசையில் சமைத்து சாப்பிட்டும் வருகிறாள். ஆசையாய் ஒரு மாங்கன்றையும் ஊன்றி வளர்க்கிறாள். எந்நேரமும் துர்கா வளர்ப்பு நாயோடும் பூனைக்குட்டிகளோடும் விளையாடுகிறாள்.

துர்கா,பாட்டியின் மூத்த மருமகள், ஹரிஹரணிடமிருந்து ஏமாற்றி பிடுங்கிய தோப்பில் இருந்து அவ்வப்போது கொய்யாக்களும், மாம்பழங்களும் எடுத்து வந்து உணவுக்கு கஷ்டப்படும் பாட்டிக்கு தருகிறாள், இருவரும் அப்படி ஓர் அன்பினை பொழிகின்றனர். இருட்டிய பின்னர் , எண்ணெய் விளக்கின் ஒளியில் பல் போன பாட்டி சொல்லும் பேய்க்கதைகள் துர்காவுக்கு உயிர். [ஒரு காட்சியில் கதை சொல்லும் பாட்டியின் நிழலை ரே அருமையாய் கையகப்படுத்தியிருப்பார்] பாட்டி மாங்கன்றும் துர்காவுடன் சேர்ந்து வளர, அதற்கு தான் தாகத்துக்கு நீர் அருந்தியது போக  செடிக்கும் வார்க்கிறாள்.


னோ ? துர்காவின் அம்மா சர்ப்பஜெயா பாட்டியை ஏற்றுக் கொள்ளவே யில்லை, கூடுதல் சுமையென்றோ? பாட்டி அவ்வப்போது சர்ப்ப ஜெயாவின் சமையலறை சென்று மிளகாயும், தளிகை சாமான்களும் எடுத்து செல்வதாலோ? இருக்கும்!!!! இருக்கும். ஒரு நாள் கோபமிகுதியால் சர்ப்பஜெயா பாட்டியை ஏச, ரோஷம் கொண்ட பாட்டி தன் பழைய நைந்த பாயுடனும்,நெளிந்த சொம்போடும் வெளியேறி தெருவில் போய் வசிக்கிறாள்.

அபு[எ]அபராஜிதன் ஜனனம்:-
ப்போது சர்ப்ப ஜெயாவுக்கு பிரசவ வலி கண்டு அழகிய  ஆண்குழந்தையும் பிறக்கிறது, துர்கா எங்கிருந்தோ பாட்டியயும் அழைத்து வருகிறாள். ஹரிஹரனுக்கு மூன்று மாதமாக சம்பளபாக்கி 24 ரூபாய் வரவில்லை, நிலசுவாந்தாரரிடம் தன் சம்பளபாக்கியை கேட்கவும் திராணி இல்லை, சர்ப்பஜெயா உறவினரிடம் 5ரூபாய் கடன் வாங்கி செலவுகளை சமாளிக்கிறாள். பாட்டி தன் நைந்த கயிறுகளை சேர்த்து அழகாய் தொட்டில் செய்து பேரனை கிடத்தி,ராசகுமாரனாக பாவித்து அழகிய தெம்மாங்கு பாடல்களை பாடுகிறாள்.

ர்ப்பஜெயாவும் ஹரிஹரணும்  வரப்போகும் அபுவின் பிறந்தநாளை எப்படியாவது சிறப்பாய் கொண்டாட முயற்சிக்கின்றனர். இதற்கிடையே ஹரிஹரனுக்கு வேறொரு நிலசுவாந்தாரரிடம் பூஜாரி வேலை கிடைக்கிறது. செலவுகளை இழுத்துபிடித்து சமாளிக்கின்றனர், ஹரிஹரணுக்கு புகையிலை போட்டு ஹுக்கா இழுக்கும் பழக்கமுள்ளது, அவர் ஹுக்கா பிடித்துக்கொண்டே இரவில் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் கவிதைகள்,கதைகள் வடித்தாலும் , படிக்கத்தான் ஆளில்லை!!!மனைவி இவர் திருமணத்துக்கு முன்பிருந்த பனாரஸிலேயே போய் ஈமைச்சடங்கு புரோகிதம் செய்யலாமே என அறிவுறுத்த, அவர் முன்னோரின் வீடு இதை புறக்கணிக்கக்கூடாது,பணம் சேரும்,அப்போது சீரமைப்போம் என்கிறார்.


அபு வளர்தல்:-

ப்போது துர்கா பதின்ம வயதில்அடியெடுக்க,இவளின் அப்பா அம்மாவுக்கு வீட்டை பழுதுபார்க்க வேண்டிய செலவு இருப்பதால்,இவளின் திருமணத்தை பற்றி அவ்வளவாய் யோசிக்கவில்லை, அபுவுக்கு மூன்று வயது,பெண்கள் படித்து என்ன ஆகப்போகிறதென்று யோசித்தோ?பெண்கல்வி அங்கே புழக்கத்தில் இல்லாததாலோ அபு மட்டும் சில பர்லாங் தூரம் கடந்துபோய்,

ரு மளிகைகடையுடன் பிராமணர் நடத்தும் தரைப்பள்ளிக்கூடத்தில் படிக்கிறான், அங்கே படிப்பை விட பிராமண உபாத்தியாயர் செய்யும் கொணஷ்டையிலேயே இவன் கவனம் போகிறது, அவர் சதா இலக்கியத்தையும் , நாடகத்தையும் பற்றியுமே பேசுகிறார். இடையில் வியாபாரமும், உப்பில் சொருகப்பட்ட குச்சி கொண்டு பிள்ளகளுக்கு அடியும் பலே,பலே!!! [வேடிக்கையாக ஒருவர் தலைக்கு எண்ணெயை ஓஸி வாங்கி தேய்த்துக்கொண்டும் செல்கிறார்]

புவும் துர்காவும் தாயும் பிள்ளையும்  போல அப்படி ஒரு அன்பு, அபுவுக்கு  குளிப்பாட்டுதல், சோறூட்டுதல், தலைவாருதல், உடையணிவித்தல் என தாயாய் எல்லா பணிவிடையையும் செய்கிறாள் துர்கா, இருந்தும் அவளின் பொம்மை பெட்டியை மட்டும் அவன் தொட்டால் தீர்ந்தான், அடிதான். அதில் அவளுக்கு பிடித்தமான, சோவிகள், பாசிமணிகள், சிப்பிகள், புளியங்கொட்டை என எழைகளின் விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன.

துர்காவின் சக வயது தோழியுடன் அடிக்கடி விளையாடப் போகிறாள், அவளுக்கு திருமணம் நிச்சயமானது கேட்டு, இவளுக்கும் அந்த  திருமண  ஆசைகள் எழுகின்றன, ஆனால் வீட்டின் ஏழ்மையை உணர்ந்தவள், தனக்கு ஒருபோதும் திருமணம் ஆகாது!!! என உறுதியாய் நம்புகிறாள்.

அத்தைப்பாட்டியின் சாவு:-

ப்போது குளிர்காலமாதலால் இந்திர் பாட்டிக்கு இரவில் மிகவும் குளிர பழைய நைந்த கோணிப்பையை வட்டமாய் ஓட்டை போட்டு அதில் தலையை நுழைத்துக்கொண்டு சாலவையாக அணிந்து குளிரிலிருந்து தப்புகிறாள். ஹரிஹரன் சம்பளம் வந்ததும் சாலவை வாங்கித்தருவதாய் சொன்னதை நம்பியவள்,ஒருகட்டத்தில் தாளாமல் மூத்த மருமகன் அளித்த பழைய போர்வை ஒன்றை போற்றிக்கொள்ள, சர்ப்பஜெயாவுக்கு வந்த கோபத்தில், போர்வை மட்டுமா அவர்களிடம் கேட்பது? அவர்களிடமே சாப்பாடும், இருப்பிடமும் கேட்டுக்கொள், என விரட்டிவிடுகிறாள்.

ங்கே சென்ற பாட்டிக்கோ ஏமாற்றமே மிச்சம், இங்கேயே மீண்டும் வந்த பாட்டியை சர்ப்பஜெயா மதிக்காமல் போக ரோஷம் கொண்ட பாட்டி கடைசியாய் தண்ணீர் வாங்கி குடிக்கிறாள். பின் வெளியேறியவள் ஒத்தையடிப்பாதையிலேயே அனாதைப்பிணமாய் செத்தும் போகிறாள்.

கரும்புத்தோட்டமும் ரயில் காணுதலும்:-

துர்காவின் பெட்டியிலிருந்து நெற்றிச்சுட்டியை அப்பு எடுத்து அணிந்துகொள்ள, கோபம் கொண்ட துர்கா, அவனை சீண்டி அடிக்கிறாள், அம்மா சர்ப்பஜெயா கன்றுக்குட்டி கட்டவிழ்த்து ஓடிவிட்டது என அதை தேடச் சொல்ல, துர்காவும், அப்புவும் தொலைதூரம் கன்றுக்குட்டியை தேடிப்போகின்றனர்.வழியில் கரும்பு ஒடித்து தின்கின்றனர். மின்சாரம் கொண்டு செல்லும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள் தென்பட, அதில் வரும் வினோதமான ஒலியை கேட்கின்றனர்.

தூரத்தில் இப்போது கூஎன சத்தம் கேட்க இவர்கள் என்னவென அங்கே இருப்பு பாதை நோக்கி செல்லும் முன்னரே ரயில் புகையை கக்கி கடந்து சென்றுவிடுகிறது. இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் வழியில் கன்றுக்குட்டியை அழைத்துக்கொண்டு, அனாதைப் பிணமான அத்தைப்பாட்டியையும் பார்த்து அழுதபடி , எழுப்ப முயன்று தோற்கின்றனர். இவர்கள் நினைவு தெரிந்து பார்த்த முதல் சாவு, நெஞ்சில் தீராத வடுவாய் பதிகிறது.இப்போது பாட்டியின் மாங்கன்றுக்கு அப்புவின் வயதும், உயரமும் இருக்கும்,ஆனால் நீர் விடத்தான் ஆளில்லை.

மிட்டாய் காரர் பின் செல்லல்:- 
மாதங்கள் உருண்டோட  , இவர்களின் பாழும் வீட்டிற்கும் எப்போதும் வரும் ஒரு மிட்டாய் வியாபாரி, ஒரு மூங்கில் கம்பில் இருபுறமும் பானைகளை கயிற்றில் கட்டிக்கொண்டு, அதில் பால் கோவா, பால் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமுன்,என எச்சில் ஊறவைக்கும் பண்டங்களை சத்தம் போட்டு விற்க, துர்கா எப்போதும் அப்பாவிடம் காசு வாங்க தம்பியையே உபயோகிப்பாள், அவன் மிகுந்த செல்லமாதலால் எப்படியும் காசு பெயர்ந்துவிடும், இப்போது அம்மாவின் கண்டிப்பால் அப்பா பணம் தரத் தயங்க, இருவரும் மிட்டாய்க்காரரின் பின்னே போகின்றனர்,செல்ல நாயும் செல்கிறது.

ங்கே அவர் இவர்களின் உறவினர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவர்கள் தின்பண்டம் நிறைய வாங்கியும் ஒருதலைபட்சமாக இக்குழந்தைகளுக்கு தரக்கூடாது என கட்டளை இடுகின்றனர். அங்கே இவளின் உறவினர் பெண் ஒரு அழகிய பாசிமாலையை கோர்க்கிறாள், அதை பார்த்த துர்கா, அதை பற்றி விசாரிக்கிறாள். அம்மாவின் கண்டிப்பிருந்தும் இவளுக்கு ஒரு பால் பேடாவை யாரும் பார்க்காவண்ணம் இவளின் தோழி பின்னால் வந்து ஊட்டிச்செல்கிறாள் [குழந்தைகள்,குழந்தைகள் தான்,மிக அருமையான காட்சியது!]

பாசிமாலை திருட்டு:-
ப்போது சர்ப்பஜெயாவின் மூத்த ஓரகத்தி, இவள் குடிசைக்குள் தடாலென புகுந்து துர்காவின் விளையாட்டு சாமான்கள்  அடங்கிய பெட்டியை அற்பத்தனமாய் வெளியே எடுத்துவந்து சோதிக்கிறாள், அதைக் கொட்டி தேட, இவள் தேடி வந்தது தென்படவில்லை, அவமானத்திலும் கோபத்திலும் தவித்தவள், எங்கே துர்கா? அவள் என் மகளின் பாசிமாலையை திருடிவிட்டாள், அவள் தான் அதை அதை கடைசியாய் விசாரித்தாள், என்கிறாள்.

ந்நேரம் பார்த்து துர்கா திருட்டு கொய்யாக்களுடன் வீட்டுக்கு வர,அதை பறித்து கீழேபோட்ட உறவினர் பெண், அவளை அடிக்கப்பாய,சர்ப்பஜெயா தடுத்து, குழந்தையென்றால் பழத்துக்கு அலையும் தான், கொய்யாவில் உன் கொய்யா என பெயரா எழுதியுள்ளது? என வக்காலத்து வாங்க, அந்த பெண்மணி உன் வீட்டில் மொத்தம் இரண்டு திருடிகள், ஒன்று நீ,இன்னொன்று உன் மகள், என தூற்றிவிட்டு,என் பணம் 5 ரூபாயை சீக்கிரம் தரும் வழியைப்பார், என வெளியேறியவள். தெருவில் போவோர் வருவோரிடமும் இவளைப்பற்றி சொல்லி ஏசுகிறாள், சர்ப்பஜெயாவுக்கு வந்தகோபத்தில் துர்காவை அடித்து வெளியேற்றியவள், இருட்டியதும் மனமிறங்கி மகன் அப்புவிடம் சொல்லி திரும்ப வீட்டுக்குள் அழைக்கிறாள்.

ரவு ஹரிஹரன் 3மாத சம்பள பாக்கி 24 ரூபாயுடன் வருகிறார்.இப்போது இருவருக்கும் வீட்டை எப்படியாவது பழுது பார்க்கவேண்டும், இல்லை என்றால் வரும் மழைக்காலத்தை சமாளிப்பது கடினம், என்று சொல்ல, ஹரிஹரன் பக்கத்து நகரத்தில் வேலை தேடிப்போகிறேன் என சொல்கிறார், கண்டிப்பாக வேலை கிடைக்கும், கூலியும் நன்றாயிருக்கும், என ஆறுதல் சொல்கிறார். காலையில் பயணத்துக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

பயாஸ்கோப்பு காணுதல்:-

இப்போது ஊருக்குள் ஒரு பயாஸ்கோப்பு காட்டுபவர் வந்திருக்க, அவரிடம் பிள்ளைகள் தேனைக்கண்ட ஈயைப்போல மொய்க்கின்றனர்,துர்காவும் தம்பி அபுவிடம் ஊருக்கு செல்லும் அப்பாவிடம் காசு கேட்கச்சொல்ல, அவரும் தருகிறார், தன் பிள்ளைகள், சென்னையையும், டில்லியையும், ஆக்ராவையும்,
ஜெய்பூரையும்   பயாஸ்கோப்பில் பார்த்து மகிழ்வதை  கண்டவர் புதிய ஊருக்கு தன் கட்டுசாதத்துடன் செல்கிறார்.


துர்காவின் தோழி திருமணம்:-

ப்போது ஊரே திரண்டு,யூனிபாரம் போட்டவர்கள் மேளம் தாளம்,ஆல்டோ வகை சாக்ஸபோன் வாசிக்க, கிலோக்கணக்காண கொழுத்த மீன்களை  ஒருவர் பெரிய அரிவாள்மனையில் நறுக்க, காயகறிகள் ஒருவர் நறுக்க, விமரிசையாய் துர்காவின் தோழி திருமணம் நடந்தேறுகிறது, இப்போது துர்காவின் ஆசைகள் பெருக்கெடுக்கிறது, அவளின் திருமணம் போல தன் திருமணம் நடந்தேறுமா? என்னும் எண்ணத்தை துர்கா தன் கண்களாலேயே நயமாய் வெளிப்படுத்துகிறாள். வாரம் ஒன்று உருண்டோட,துர்காவின் தந்தை வேறு நகரத்துக்கு போனவர் அங்கேயும் வேலை சரிவர கிடைக்கவில்லை,என கடிதம் எழுதுகிறார். வீட்டில் வாங்கிப்போட்ட மளிகை சாமான்கள் ரொம்ப நாள் காணாது!!!

சுவை கறந்து தரும் இடைச்சி இவளிடம் பால் வற்றப்போகிறது, பசுவுக்கும் கொஞ்சம் தீனிகாட்டு என்கிறார், துர்கா பூனைக்கு பாலுக்கு பதில் நீர் மட்டும் வைக்கிறாள். இப்போது அழகாக விரதம் மற்றும் பூஜை முறைகளை துர்கா அம்மாவுக்கு பயந்து செய்யத்துவங்குகிறாள். 1 மாதம் உருண்டோட, துர்காவின் தந்தை கடிதத்தில் வேலை கிடைத்துவிட்டது , என்றும் விரைவில் ஊருக்கு வருகிறேன் என்கிறார்.

வீட்டில் இப்போது குந்துமணி அரிசி இல்லை என்பதை சர்ப்பஜெயாவின் ஓரகத்தி கண்டுவிட்டு, இவளை உரிமையுடன் கோபிக்கிறாள்,[ரே நேராக காட்சிக்கு போய்விடுகிறார், நீட்டி முழக்குவதில்லை]  என்னை அந்நியமாய் நினைக்காதே என்றவள், கையில் ரூபாயை திணிக்கிறாள், இவள் அழுதவள் மறுக்கிறாள், அதை கீழே போட்டுவிட்டு அவள் செல்கிறாள்.இப்போது அவள் உதவ வந்தும் ரோஷத்தால் சர்ப்பஜெயா மறுக்கிறாள்.கணவனின் வரவைக்கூறி  இப்போது ஒரு அஞ்சல் அட்டை வர அது இவளுக்கு மிக ஆறுதலாயிருக்கிறது.


பேய்மழைக்காலம்:-

ங்காளம் என்றாலே மழைக்கும் புயலுக்கும் பேர்போனதாயிற்றே!!! பேய்  மழை இங்கே விளாசி எடுக்கிறது, சிறுமி துர்கா மழையில் நனையும் ஆசையில் அபுவையும் அழைத்துக்கொண்டு  பெரிய புளிய மரத்தடிக்கு போகிறாள், அபு அங்கேயே குளிரில் நடுங்கி  நிற்க, இவள் துள்ளி குதித்து ஆசைதீர நனைகிறாள், தன் வயதின் எல்லா ஆசைகளும் பூர்த்தி அடைந்ததாய் உற்சாகம் கொண்டவள், வீடு திரும்ப, 4 நாட்கள் கடும் ஜுரம் வந்து படுத்த படுக்கையாகிறாள்.

வளை சோதித்த மருத்துவர்,ஜன்னி கண்டுள்ளது, இன்னொரு முறை நனையலாகாது என்கிறார். இரவும் பேய்மழை,இவர்கள் வீட்டுக்கோ கதவு சன்னலில்லை, சாக்குப்பைதான். அதுவும் காற்றில் பிய்த்துக்கொள்ள. ஒற்றை எண்ணெய் விளக்கும் அணையப்போக,இவள் சாக்குப்பையை கட்டும்போதே துர்கா எதோ மரண பயத்தில் அழைத்து, குழந்தை போல அம்மாவின் அரவணைப்பை கடைசியாய் வேண்டுபவள் போல அம்மா என அணத்தி கைகளை தூக்குகிறாள், சர்ப்பஜெயா எதோ விபரீதம் என உணர்ந்தவள்,இவளை இறுக்க அணைத்து தேற்றுகிறாள். குழந்தை துர்க்கா அப்படியே உயிரையும் விட்டுவிடுகிறாள். விரைவில் வருவதாய் கடிதம் போட்ட ஹரிஹரன், இவர்களுக்காக பக்கத்து ஊர் சந்தையில் ஆசையாய் பொருட்களும் துணிமணிகளும் வாங்குகையிலேயே  இங்கே துர்காவின் சடங்குகள் முற்றுபெற்றிருக்கிறது.


புத்திர சோகம்:-

சோறு தண்ணீரில்லாமல் அழுது வீங்கிய கண்களுடனும்,கலங்கிய நெஞ்சமுடனும் பிள்ளைக்கு உணவுக்கு கீரை ஆய்ந்து கொண்டிருந்த சர்ப்பஜெயாவுக்கு ஓரகத்தி விட்டிலிருந்து ஒரு சிறுமி காய்கறிகள் கொண்டு வந்து தருகிறாள். மழை செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமில்லை, இந்த பாழடைந்த வீட்டை இன்னமும் சிதிலமாக்கிவிட்டது.

பின்னாலேயே துர்கா,துர்கா, அபு!!! என அழைத்தபடி ஹரிஹரன் வந்துவிட, இவள் எதுவும் பேசாமல் அவருக்கு வேண்டிய கூஜா, தண்ணீர், மேல் துண்டு, புகையிலை ஹுக்கா எடுத்து  வைக்கிறாள், முகத்தை மூடி முக்காடும் இட்டுள்ளாள். இவரின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்லை, அவரே தான் வாங்கிவந்த சாமான்களை ஒவ்வொன்றாய் ஆசையுடன் காட்டுகிறார். சப்பாத்திக்குழவியும், மனையும். மகாலட்சுமி படமும் இவளுக்கு. துர்காவுக்கு பனாரஸ் புடவை என ஆசையாய் காட்ட, சர்ப்பஜெயா பொங்கி வீரிட்டு அழுகிறாள்.

ஊரை ,வீட்டை புறக்கணித்தல்:-

ப்போது மிகுந்த மன விரக்தியில் சொந்த ஊரை, முன்னோர் வீட்டை, துறப்பதென்ற முடிவில், ஹரிஹரன் தன் கவிதைகளை, கதைகளை, தூசுதட்டி, தட்டுமுட்டு சாமான்களை, ஏறக்கட்டி எடுத்து வைக்கிறார் .ஊரார் சிலர் ஒன்று கூடி இவர் முன் அமர்ந்து ஊரைவிட்டு போவது நல்லாவா இருக்கு? நாங்கலெல்லாம் இல்லை?மூன்று தலைமுறையாக மனிதர்கள் வாழந்த வீடு, என சொல்ல, இவர் போதும் இந்த வீட்டை புறக்கணிப்பதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை,சதா ஆசைப்பெண் துர்காவின் முகத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் இந்த வீடு.போதும் !!! என்கிறார். எப்போதும் அடுத்தவரின் கையை எதிர்பார்க்கும் வாழ்வு, வாழ்வா? என்கிறார்.

ள்ளே பரணில் எதோ எடுக்க ஏறிய அப்பு, கொட்டாங்குச்சியை எடுக்க அதில் இவனின் உறவுப்பெண்ணின் பாசிமாலை இருக்க, திகைக்கிறான்,உயிரினும் மேலான அக்கா தன்னிடமும் சிலவற்றை மறைத்துள்ளாள். என நினைத்தவன், இறந்தபின்னர்கூட அவளுக்கு அவப்பெயர் வேண்டாம் என நினைத்து ஓட்டை ஜன்னல் வழியே குதித்தவன், அந்த பாசிமணியை தேங்கிய நீரில் எறிகிறான்., இப்போது பரம திருப்தி அபுவின் முகத்தில்.

வலை தோய்ந்த மூன்று முகங்களும் கட்டை மாட்டு வண்டியில் கடையாணி ஓசையுடன்  செல்ல , இதுதான் சாக்கென்று ஒரு நீளமான பாம்பு இவர்கள் வீட்டுக்குள் மெல்ல நுழைவதையும் ரே காட்டத்தவறவில்லை, பண்டிட் ரவிஷங்கரின் சித்தார் ஓசை, எத்தனையோ சங்கதிகளை நமக்கு இப்போது சொல்லுகிறது.உண்மையிலேயே பாவம் துர்கா!!!.
விரைவில் அபரஜிதோவும் அபுசன்சாரும் எழுதப் பார்க்கிறேன்.
==========000===========
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில்  பதேர் பாஞ்சாலி என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், மிக அழகான விவரணையும்,சிலாகிப்புகளும்.கண்டிப்பாய் சினிமா காதலர்கள் படிக்க வேண்டிய ஒன்று!!!அவரின் பதிவின் சுட்டி
http://www.sramakrishnan.com/?p=422

No comments:

Post a Comment